சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விவரங்கள்

சாம்சங் நிறுவனத்தின் விசேஷ திட்டங்களில் ஒன்றான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருகிறது.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீடு சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இதன் வெளியீட்டு விவரத்தை சாம்சங் நிறுவன மொபைல் பிரிவு தலைமை செயல் அதிகாரி கோ டாங் ஜின் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதன்படி சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து கூறும் போது, புதிய சாதனம் பயனர்கள் பிரவுசிங் அல்லது வேறு ஏதேனும் செய்யும் போது மொபைல் திறக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

சாம்சங் மடிக்கக்கூடிய சாதனம் குறித்து எவ்வித தகவலையும் வழங்கப்படாத நிலையில், விரைவில் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகலாம் என தெரிகிறது. மேலும் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற இருக்கும் சாம்சங் டெவலப்பர் நிகழ்வில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2018-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிலவரப்படி சாம்சங் நிறுவன வளர்ச்சி முந்தைய ஆண்டை விட 20% வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அந்த வகையில் மொபைல் போன் சந்தையில் தனது நிலையை உறுதிப்படுத்த சாம்சங் திட்டமிட்டு வருகிறது.

இத்துடன் பட்ஜெட் ரக பிரிவில் அதிக தொழில்நுட்பத்தை சற்றே குறைந்த விலையில் வழங்க சாம்சங் முடிவு செய்வதாக கூறப்படுகிறது. ஹூவாய், ஒன்பிளஸ் மற்றும் இதர சீன நிறுவனங்களின் வரவு காரணமாக சந்தையில் சாம்சங் நிறுவனம் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது.