விரைவில் இந்தியா வரும் ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன்

ஹூவாய் துணை பிரான்டான ஹானர் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உறுதி செய்துள்ளது. செப்டம்பர் மாத முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

மே மாதத்தில் சீன சந்தையில் வெளியிடப்பட்ட ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் அதன் விலை சார்ந்த விவரங்களும் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன சந்தையில் வெளியிடப்பட்ட ஹானர் 7எஸ் சிறப்பம்சங்களில் பெரும்பாலானவை ஹானர் பிளே 7 மாடலில் உள்ளதை போன்றே தெரிகிறது. எனினும் முன்பக்க கேமராவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஹானர் ஸ்மார்ட்போனினை பிரபலப்படுத்தும் நோக்கில் போட்டி ஒன்றை ஹானர் அறிவித்துள்ளது. போட்டியில் வெற்றி பெறுவோர் ஹானர் 7எஸ், ஹானர் பிளே, ஹானர் 9என் அல்லது ஹானர் பேன்ட் 3 உள்ளிட்டவற்றை வெல்ல முடியும். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் முதலில் சைன்-அப் மூலம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பின் நாள் ஒன்றிற்கு மூன்று முறை என சக்கரத்தை சுழல விட முடியும். இதன் முடிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதன் மூலம் போட்டியாளரின் வெற்றி வாய்ப்பு அதிகமாகும். இந்த போட்டி செப்டம்பர் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.