டூயல் வோல்ட்இ வசதி கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் டீசர் வெளியானது

சியோமி நிறுவனத்தின் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் நாளை இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில், இவற்றில் டூயல் வோல்ட்இ வசதி வழங்கப்பட இருப்பதை குறிக்கும் புதிய டீசர் புகைப்படத்தை சியோமி இந்தியா வெளியிட்டுள்ளது.

முன்னதாக புதிய ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 5-ம் தேதி வெளியிடப்படும் என்ற டீசரை சியோமி வெளியிட்டிருந்தது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின்படி சியோமி நிறுவனம் ரெட்மி 6 சீரிஸ் மாடல்களை இந்தியாவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ஸ்மார்ட்போன் மாடல்கள் குறித்து சியோமி தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. முன்னதாக சீனாவில் ரெட்மி 6 சீரிஸ் மாடல்கள் ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. முதற்கட்டமாக ரெட்மி 6 மற்றும் 6ஏ ஒரு விழாவிலும், ரெட்மி 6 ப்ரோ சில வாரங்கள் இடைவெளிக்குபின் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தன.

இந்நிலையில் சமீபத்தில் சியோமி வெளியிட்டிருக்கும் டீசர் டூயல் வோல்ட்இ அம்சம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் ரெட்மி 6 சீரிஸ் மாடல்களில் இரண்டு சிம் கார்டுகளிலும் 4ஜி வோல்ட்இ கனெக்டிவிட்டி பெற முடியும். இந்த அம்சம் ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5ஏ மாடல்களில் வழங்கப்படாமல் இருந்தது.