ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கு அமோக வரவேற்பு

ரிலையன்ஸ் ஜியோவின் ஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கான முன்பதிவுகள் ஆகஸ்டு 15-ம் தேதி துவங்கிய நிலையில், இதுவரை மொத்தம் 900 நகரங்கள் மற்றும் டவுன்களில் இருந்து முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிகாஃபைபர் சேவைக்கான வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு முக்கிய சந்தைகளில் இறுதிகட்ட இணைப்புகளுக்கான பணிகளுக்கு உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்களிடம் இருந்து இடையூறு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோ சேவை துவங்கியதும், அதனுடன் போட்டியை சமாளிக்க உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்கள் அச்சம் கொள்வதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கேபிள் ஆப்பரேட்டர்களுடனான பிரச்சனையை தீர்க்கும் பணிகளில் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இறுதிகட்ட இணைப்புகளில் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம், மேலும் முன்பதிவுக்கு வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பு கிடைத்திருப்பதால் சந்தையில் சரியான நேரத்தில் வெளியிடுவதை உறுதி செய்வோம்,” என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் “நாடு முழுக்க சுமார் 900 நகரங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.” என அவர் தெரிவித்தார்.