போலி ஆப்ஸ் டவுன்லோடு செய்யாமல் இருக்க சூப்பர் டிப்ஸ்

ஸ்மார்ட்போன்களை புதிதாய் வாங்கியவரும், ஏற்கனவே பயன்படுத்துவோரும் அதில் முதலில் செய்வது செயலிகளை இன்ஸ்டால் செய்வது தான். அதிகம் செயலிகளை பயன்படுத்தாதவர்களும், ஸ்மார்ட்போனில் உள்ள செயலிகளை அப்டேட் செய்வர். எப்படியோ ஸ்மார்ட்போனில் பேட்டரிக்கு அடுத்து மிகமுக்கியமானதாக இருப்பது செயலிகள் தான் எனலாம்.

அவ்வாறு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும், பிரபல செயலிகளின் போலி வெர்ஷன்களை தெரியாத் தனமாக டவுன்லோடு செய்வர். போலி செயலிகளை டவுன்லோடு செய்தால் உங்களின் மொபைலில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் தீங்கு விளைவிப்போர் கைகளில் செல்லும் வாய்ப்புகள் அதிகம். இதனால் எப்போதும் அதிகாரப்பூர்வ (ஒரிஜினல்) செயலிகளை மட்டும் டவுன்லோடு செய்வது அவசியம் என்பதோடு நம் தகவல்களுக்கும், நமக்கும் நன்மை பயக்கும்.

பிளே ஸ்டோர்களில் போலி செயலிகள் அதிகம் பரவி இருப்பதால் இவற்றை டவுன்லோடு செய்யாமல் தவிர்ப்பது எப்படி என்றும் தீங்கு விளைவிக்கும் மால்வேர்கள் உங்களது ஸ்மார்ட்போனினை பாதிக்காமல் தடுப்பது எப்படி என்றும் தொடர்ந்து பார்ப்போம்.

Phone Use

அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்கள்

ஸ்மார்ட்போனிற்கான செயலிகளை எப்போதும் அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோரில் இருந்து மட்டும் டவுன்லோடு செய்யுங்கள். செயலிகளை பல்வேறு இதர இடங்களில் இருந்தும் டவுன்லோடு செய்ய முடியும், ஆனால் இவ்வாறு செய்வதை தவிர்ப்பது நல்லது. சில சமயங்களில் ஆப் ஸ்டோர்களிலும் மால்வேர் கண்டறியப்படலாம், எனினும் இவை அடிக்கடி நீக்கப்பட்டு விடும்.

செயலியின் முன்னுரை

செயலிகளின் முன்னுரையயில் அதிக வாக்கியப்பிழை மற்றும் இலக்கியப் பிழைகள் இருந்தால், அது போலி செயலி தான் என்பதை அறிந்து கொள்ளலாம். நம்பக்கூடிய டெவலப்பர் எனில், இதுபோன்ற தவறுகளை எவரும் செய்ய மாட்டார்கள்.

விமர்சனங்கள் மிகமுக்கியம்

பெரும்பாலும் செயலிகளின் விமர்சனங்களை டவுன்லோடு செய்யும் முன் படிப்பது நல்லது. போலி செயலிகளுக்கு எப்போதும் மிக மோசமான விமர்சனங்கள் நிறைந்திருக்கும். இதனால் செயலியை டவுன்லோடு செய்யும் முன் விமர்சனங்களை படித்தே போலி செயலிகளை கண்டறிந்து விடலாம்.

டெவலப்பர் பின்னணி

ஆப் டெவலப்பரின் வலைதளம் சென்றோ அல்லது ஆப் ஸ்டோர் டிஸ்க்ரிப்ஷன் பகுதிக்கு சென்றோ டெவலப்பர் விவரங்களை பார்க்கலாம். செயலிகளை டவுன்லோடு செய்யும் முன் டெவலப்பர் பற்றி அறிந்து கொள்வது நல்லது. உங்களுக்கு சந்தேகம் ஏற்படும் பட்சத்திலோ, ஒருவேளை டெவலப்பர் வலைதளம் அல்லது சமூக வலைதளங்களில் இல்லாத பட்சத்தில் அந்த செயலியை டவுன்லோடு செய்யாமல் இருப்பது நல்லது.

டவுன்லோடு எண்ணிக்கை

செயலி உண்மையானதா தானா என்பதை அறிந்து கொள்ள இது சிறப்பான வழிமுறை எனலாம். அதிகளவு டவுன்லோடு செய்யப்பட்டு இருந்தால், குறிப்பிட்ட செயலியை நம்புவதற்கான காரணிகள் அதிகம் எனலாம். அந்த வகையில் நீங்கள் டவுன்லோடு செய்யும் செயலியை அதிகம் டவுன்லோடு செய்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.