ஏர்டெல் ரூ.399 சலுகையில் 20ஜிபி கூடுதல் டேட்டா

ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் சலுகையில் புதிய மாற்றம் செய்துள்ளது. அதன் படி ரூ.399 மைபிளான் இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகை மாற்றியமைக்கப்பட்டு தற்சமயம் 20 ஜிபி வரை கூடுதல் டேட்டாவினை ஒரு வருடத்திற்கு வழங்குகிறது.

இதுவரை பயனர்களுக்கு மாதம் 20 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதுகுறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி பயனர்களுக்கு 20 ஜிபி டேட்டா ஒரு வருடத்திற்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.

எனினும் 20 ஜிபி கூடுதல் டேட்டா மாத-கணக்கில் வழங்கப்படுகிறதா அல்லது ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஏர்டெல் வலைதளத்தில் ஒரு வருடத்திற்கு கூடுதலாக 20 ஜிபி டேட்டா என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவேளை கூடுதல் டேட்டா ஒரு வருடத்திற்கு வழங்கப்பட்டால், சலுகையில் மாதம் வழக்கமாக கிடைக்கும் 20 ஜிபி டேட்டா மற்றும் ஒரு ஆண்டு வேலிடிட்டியுடன் 20 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படலாம். மேலும் இது மாத டேட்டா எனில், பயனர்களுக்கு மாதம் வழக்கமாக கிடைக்கும் 20 ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 20 ஜிபி என ஒரு மாதத்திற்கு மொத்தம் 40 ஜிபி டேட்டா கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.399 சலுகை டேட்டா ரோல்ஓவர் சலுகையின் கீழ் வழங்கப்படுகிறது, அந்த வகையில் பயன்படுத்தப்படாத டேட்டா பயனர் கணக்கில் சேர்க்கப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.399 சலுகையில் இருமடங்கு டேட்டா வழங்கப்பட்டது. இதனால் ஏற்கனவே வழங்கப்பட்ட 10 ஜிபி டேட்டா மாதம் 20 ஜிபியாக அதிகரித்தது.

இதேபோன்று வோடபோன் நிறுவனமும் ரூ.399 மற்றும் ரூ.499 சலுகைகளை மாற்றியமைத்தது. புதிய ரூ.399 சலுகையில் வோடபோன் மாதம் 40 ஜிபி டேட்டாவும், ரூ.499 ரெட் சலுகையில் மாதம் 75 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.