இனி வாட்ஸ்அப்பில் அடிக்கடி மெசேஜ் ஃபார்வேர்டு செய்ய முடியாது

ஃபேஸ்புக் நிறுவனம் வைத்திருக்கும் வாட்ஸ்அப் செயலியில் புதிய மென்பொருள் அப்டேட் ஐபோன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய வாட்ஸ்அப் அப்டேட் ஐபோனில் பலருக்கும் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்வோருக்கு பாதகமாக அமைந்துள்ளது. அதன்படி ஐபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு அதிகமாக மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்ய முடியாது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஃபார்வேர்டு மெசேஜ்களால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த அம்சம் ஜூலை 2018-இல் முதல் முறையாக அறிவிக்கப்பட்டது.

புதிய அப்டேட் மூலம் போலி செய்திகளை பரப்புவதற்கு மாற்றாக, வாட்ஸ்அப் குறிக்கோளான பிரைவேட் மெசேஜிங் ஆப் என்ற பிம்பத்தை தற்காத்து கொள்ள முடியும். புதிய அம்சங்கள் வாட்ஸ்அப் ஐஓஎஸ் ஸ்டேபிள் வெர்ஷனில் சில நாட்கள் சோதனைக்கு பின் தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து அப்டேட் செய்து கொள்ள முடியும்.

வாட்ஸ்அப் தளத்தில் அதிகளவிலான போலி குறுந்தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வசதி ஜூலை மாத வாக்கில் அறிவிக்கப்பட்டது. வாட்ஸ்அப் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதன் பயன்பாடு இருக்க வேண்டும் என்பதில் வாட்ஸ்அப் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கவும், ஃபிஷிங், ஸ்பேம் போன்ற தொல்லைகளை தடுக்கவும் சஸ்பீஷியஸ் லின்க் எனும் புதிய அம்சத்தை வழங்கியது. அதன்படி செயலியில் பரப்பப்படும் வலைதள முகவரி போலியானதாக இருப்பின், அதனை வாட்ஸ்அப் சஸ்பீஷியஸ் லின்க் என அடையாளப்படுத்தும்.

ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.204 பதிப்பில் மிக குறைந்த அளவு பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட்டு, அதன்பின் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.221 வெர்ஷனில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்பதையும் வாட்ஸ்அப் FAQ பக்கத்தில் பதிவிட்டது.