விண்டோஸ் 10 கணினிகளில் தமிழ் 99 விர்ச்சுவல் கீபோர்டு அறிமுகம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 10 கணினிகளில் தமிழ்99 பிரபல தமிழ் மொழிக்கான விர்ச்சுவல் கீபோர்டினை அறிமுகம் செய்துள்ளது. ஏப்ரல் 2018 விண்டோஸ் அப்டேட் மூலம் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய வசதி வழக்கமான கீபோர்டுகளிலும், டச் கீபோர்டுகளிலும் சீராக வேலை செய்யும் என்பதால், மிக எளிமையாக தமிழில் டைப் செய்ய முடியும். இன்ஸ்க்ரிப் தரத்தில் தமிழ் கீபோர்டு சப்போர்ட் விண்டோஸ் தளங்களில் 2010-ம் ஆண்டு முதல் கிடைக்கிறது என்றாலும், தமிழ் 99 கீபோர்டு விண்டோஸ் 10 பயனர்களுக்கு பயன்படுத்த கூடுதல் விருப்பங்களை வழங்குகிறது.

1999-ம் ஆண்டு தமிழக அரசால் சான்றளிக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்ட தமிழ் 99 கீபோர்டு பயனர்கள் மிக எளிமையாகவும், அதிவேகமாகவும் தமிழில் டைப் செய்ய வழி வகுக்கிறது.

Tamil 99 keyboard

தற்சமயம் விண்டோஸ் 10 பயனர்களுக்குக்கு தமிழ் (இந்தியா) மற்றும் தமிழ் (இலங்கை) கிடைக்கும் என்பதால், தமிழ் பயன்படுத்தும் பெருமளவு பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அந்த வகையில் இந்தியா மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பயனர்களுக்கு புதிய அம்சம் பயன்தரும்

“தொழில்நுட்பத்தில் மொழி ரீதியிலான இடைவெளிகளை அனைவரும் கடந்து வர மைக்ரோசாஃப்ட் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. உள்ளூர் மொழிகளில் கம்ப்யூட்டிங் வசதியை வழங்கி, மொழி பயன்படுத்துவோரை ஊக்குவிப்பது எங்களது கடமையாக இருக்கிறது,” என மைக்ரோசாஃப்ட் இந்தியா தலைமை நிர்வாக அலுவலர் மீட்டுல் படேல் தெரிவித்தார்.