வாட்ஸ்அப்-இல் ஒரு க்ளிக் உங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம்!

இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகரித்து இருப்பதை போன்று, இதன் மூலம் ஏற்படும் குற்ற சம்பவங்களும் அதிகரித்து இருக்கின்றன. வாட்ஸ்அப் மூலம் நாம் கற்பனை செய்ய முடியாதவற்றை, பலர் பகிரங்கமாக செய்து நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் பேராபத்தையும், பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்த காரணமாக உள்ளனர்.

இதற்கிடையே ஆன்லைன் உளவு நடவடிக்கை பற்றி பலரும் தெரிந்து கொள்வதில்லை. ஆன்லைன் தனியுரிமை பற்றி கவலை கொள்ளாததே இதற்கு முக்கிய காரணம் எனலாம். ஆன்லைனில் பின் தொடர்வோர் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல், பலர் அவர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து மிரட்டுவது, துன்புறுத்துவது மற்றும் எச்சரிக்கை விடுப்பது உள்ளிட்டவை பாதிக்கப்பட்டோருக்கு பெரும் பிரச்சனையாகி விடுகிறது.

தீய எண்ணத்துடன் பின்தொடர்வோர் தனது திட்டத்தை செயல்படுத்த முன்கூட்டியே தயாராகி இருப்பர். சமூக வலைதளங்களில் உங்களை பற்றிய தகவல்கள், ஆபத்தை ஏற்படுத்தாது என்ற எண்ணத்தில் நீங்கள் அவற்றை பதிவிடுவீர்கள், ஆனால் உங்களது சிறு சிறு தகவலும் தீய எண்ணத்துடன் பின்தொடர்வோருக்கு போதுமான அளவு பயனுள்ளதாக அமையும். பின் இவற்றை வைத்தே அவர்கள் உங்களுக்கு ஆபத்தானவர்களாகி விடுவர்.

ஒருவேளை நீங்கள் சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கவில்லை என்றாலும், வாட்ஸ்அப்பில் ஒற்றை புகைப்படம் அல்லது ஜிஃப் மூலம் உங்களது இருப்பிடத்தை மிகத்துல்லியமாக டிராக் செய்துவிட முடியும். இதற்கு அவர்கள் அனுப்பும் புகைப்படம் அல்லது ஜிஃபை நீங்கள் க்ளிக் செய்தாலே போதுமானது.

iphone-WA-App-icon

இது எவ்வாறு நடக்கிறது?

முதலில் உங்களுக்கு தெரியாதவர் மூலம் வாட்ஸ்அப்பில் உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும். பெரும்பாலும் இந்த மெசேஜ் சுருக்கப்பட்ட லின்க் போன்று இருக்கும், இதை க்ளிக் செய்தால் பிரபலங்களின் புதிய படம் அல்லது சமீபத்திய அரசாங்க ஊழல் பற்றிய உங்களை அதிகம் கவரும் வகையிலான தகவல் உருவாக்கப்பட்டு, க்ளிக் செய்யும் வகையில் இருக்கும்.

இதை க்ளிக் செய்ததும் திறக்கும் இணைய பக்கத்தில் தீங்கு ஏற்படுத்தாத தகவல் அல்லது புகைப்படம் போன்றவை இடம்பெற்றிருக்கும். இதன்பின் நீங்கள் குறிப்பிட்ட மெசேஜில் ஒன்றும் இல்லை என நினைத்து அதனை நீங்கள் அழித்து விடுவீர்கள். ஆனால் இவ்வாறு செய்ததன் மூலம் உங்களது இருப்பிட தகவலை வழங்கி விட்டீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது.

mobile-phone-tower

இதன் பின்னணியில் என்ன நடக்கிறது?

உங்களை தீய எண்ணத்துடன் பின்தொடர்வோர் குறிப்பிட்ட குறுந்தகவல் ஒன்றில் மாஸ்க் செய்யப்பட்ட லின்க்-ஐ உருவாக்குவார். இதுபோன்ற லின்க்-கள் பெரும்பாலும் ஐ.பி. லாகர் (IP Logger) மூலம் உருவாக்கப்படுகிறது. இந்த வேலையை செய்ய பெரும்பாலான வலைதளங்கள் உள்ளன, மேலும் இவற்றை எளிய கூகுள் தேடல் மூலமாக கண்டறிந்து விடலாம். இனி பின்தொடர்வோர் உங்களுக்கு அவர் உருவாக்கிய குறுந்தகவலை வாட்ஸ்அப் அல்லது எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பி உங்களை க்ளிக் செய்ய வைப்பார்.

நீங்கள் அவர் அனுப்பிய குறுந்தகவலை க்ளிக் செய்ததும், உங்களது ஐபி முகவரி (IP Address) லாக் இன் செய்யப்பட்டு விடும், பின்தொடர்வோர் உடனே இந்த தகவலை பெற முடியும். இதன் பின் பின்தொடர்வோர் எளிமையான ஐபி டிராக்கர் (IP Tracker) சேவையை கொண்டு உங்களது இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாம். இந்த தகவல் கொண்டு அவர் உங்களை அச்சுறுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதில் ஒற்றை ஆறுதல் என்னவெனில், சில ஐபி லாகர் மற்றும் டிராக்கர்கள் மட்டுமே சரியான இருப்பிடத்தை மிகத்துல்லியமாக வழங்க முடியும். சரியான இருப்பிடத்தை வழங்கும் சேவையை கண்டறிய ஆய்வு செய்யப்பட வேண்டியிருக்கும். சில சமயங்களில் பின்தொடர்வோர் உங்களது மாவட்டம் அல்லது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள டெலிகாம் டவர் விவரங்களை வழங்கும். இதை வைத்துக் கொண்டு பின்தொடர்வோர் உங்கள் பகுதிக்கு வந்து உங்களை நேரடியாக பின்தொடர்ந்து வீட்டின் முகவரியை அறிந்து கொள்ள முடியும்.

getlinkinfo scrn

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

இதனால் வாட்ஸ்அப்பில் உங்களுக்கு அறிமுகமில்லாதவர் அனுப்பும் குறுந்தகவல், லின்க் அல்லது புகைப்படங்களை நீங்கள் க்ளிக் செய்யும் முன் அது ஐபி லாகர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை சரி செய்ய வேண்டும். இதை அறிந்து கொள்ள ‘Getlinkinfo.com’ அல்லது பல்வேறு இதர தளங்கள் இருக்கின்றன. இவற்றைக் கொண்டு குறிப்பிட்ட லின்க் ஐபி லாகர் மூலம் உருவாக்கப்படதா என்பதை தெரிந்து கொண்டு, ஆபத்துகளில் சிக்காமல் இருக்கலாம்.