ட்விட்டர் விதிகளை மீறிய சுமார் 1.43 லட்சம் செயலிகள் நீக்கம்

ட்விட்டர் தளத்தில் போலி செயலிகள் இடம்பெறாமல் இருக்க பல்வேறு மாற்றங்களை அந்நிறுவனம் சமீப காலங்களில் மேற்கொண்டு வருகிறது. கூடுதலாக பயனர்களுக்கு கெட்ட செயலிகளை குறிப்பிடும் வசதியும் வழங்கப்படுகிறது.

கெட்ட செயலிகள் தளத்தை பயன்படுத்துவோரின் தனியுரிமைக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் செயலிகளை தளத்தில் அனுமதிப்பதில் பல்வேறு மாற்றங்களை அந்நிறுவனம் செய்திருக்கிறது. அதன்படி ட்விட்டரின் வழக்கமான API-க்களை இயக்க முதன்முறையாக அனுமதி கோரும் டெவலப்பர்கள் தங்களது செயலிகளை பதிவு செய்ய புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு பதிவு செய்யும் டெவலப்பர்கள் தங்களது முழு விவரங்களுடன் ட்விட்டர் API-க்களை எவ்வாறு பயன்படுத்த இருக்கின்றனர் என்றும், அவ்வாறு பயன்படுத்துவது பயனரின் அனுபவத்தை எந்த வகையில் சிறப்பானதாக மாற்றும் என்பதையும் விரிவாக வழங்க வேண்டும்.

புதிய விதிமுறைகளின் படி ட்விட்டர் API-க்களை பயன்படுத்த டெவலப்பர்கள் சில புதிய அம்சங்கள் மற்றும் கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டும். எனினும், தொடர்ந்து டெவலப்பர்களுக்கு உயர்-ரக மற்றும் விதிமுறைகளுக்குள் சிறப்பான அனுபவத்தை வழங்குவோம் என ட்விட்டர் உறுதியளித்துள்ளது.

ஏற்கனவே பதிவு செய்திருக்கும் டெவலப்பர்களும் தங்களது API-க்களை இயக்க புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ட்விட்டர் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கான நேரத்தை ட்விட்டர் சரியாக குறிப்பிடவில்லை, என்றாலும் டெவலப்பர்கள் புதிய வழிமுறைகளை துவங்கும் முன் 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் ட்விட்டர் தளத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் 1,43,000 செயலிகளும், ட்விட்டர் விதிமுறைகளை மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.