நூழிலையில் சியோமியை முந்தி மீண்டும் முதலிடம் பிடித்த சாம்சங்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் முன்னணி இடத்தை சாம்சங் மீண்டும் பிடித்துவிட்டது. 2018 இரண்டாவது காலாண்டு வரையிலான விற்பனையில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமியை பின்னுக்குத் தள்ளி சாம்சங் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

இதுகுறித்து கவுண்ட்டர்பாயின்ட் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில் சாம்சங் நிறுவனத்தின் மூன்று ஸ்மார்ட்போன்களின் விற்பனை அந்நிறுவனத்தை மீண்டும் முதலிடத்திற்கு அழைத்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போன் 2018 இரண்டு காலாண்டு முடிவதற்குள் முதல் 5 இடங்களில் நுழைந்திருக்கிறது. இத்துடன் கேலக்ஸி ஜெ2 (2018) மற்றும் கேலக்ஸி ஜெ4 உள்ளிட்ட மூன்று மாடல்கள் மட்டும் இந்த காலக்கட்டத்தில் சாம்சங் விற்பனை செய்திருந்த மொத்த ஸ்மார்ட்போன்களில் சுமார் 50% அதிகம் ஆகும்.

Xiaomi Phone Pic

இந்தியாவில் 2018 இரண்டாவது காலாண்டில் 29% பங்குகளுடன் சாம்சங் முதலிடத்தை பிடித்திருக்கிறது, இது சாம்சங் 2017 இரண்டாவது காலாண்டில் பெற்றதை விட 5% அதிகம் ஆகும். சாம்சங் நிறுவனத்தை தொடர்ந்து சியோமி நிறுவனம் 28% பங்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சியோமி நிறுவனத்துக்கு இது முந்தைய ஆண்டை விட 16% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற சீன நிறுவனங்களான விவோ, ஒப்போ மற்றும் ஹானர் உள்ளிட்டவை முறையே மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்திருக்கின்றன. இவை முறையே 12%, 10% மற்றும் 3%பங்குகளை பெற்றிருக்கின்றன. இதில் ஹானர் 2017 இரண்டாவது காலாண்டை விட 1% அதிகரித்திருக்கிறது. ஒப்போ 10% புள்ளிகளை தக்கவைத்துக் கொண்ட நிலையில் விவோ நிறுவன பங்குகள் 1% குறைந்திருக்கிறது.