40 நாட்களில் 4 லட்சம் – விற்பனையில் அசத்தும் ஒப்போ ரியல்மி 1

இந்தியாவில் ஒப்போ மற்றும் அமேசான் இந்தியா இணைந்து ரியல்மி எனும் புதிய ஸ்மார்ட்போன் பிரான்டு வாயிலாக ரியல்மி 1 எனும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தன.

மே மாதத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்ட ஒப்போ ரியல்மி 1 ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய 40 நாட்களில் 4 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. ஒப்போ ரியல்மி 1 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட வேரியன்ட் முழுமையாக விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் ரியல்மி 1 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி60 12 என்.எம். ரக பிராசஸர் கொண்ட விலை குறைந்த ஸ்மார்ட்போனாக அறிமுகமானது.

இந்திய சந்தையில் ஒப்போ ரியல்மி 1 இத்தகைய வரவேற்பு பெற என்ன காரணம்?

உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தை பல்வேறு நிறுவனங்களுக்கு முக்கியமானதாக விளங்குகிறது. மலிவு விலையில் துவங்கி ஃபிளாக்ஷிப் ரேன்ஜ் எனப்படும் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் மாடல்களும் இங்கு அதிகளவு விற்பனையாகின்றன. அவ்வாறு இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் ரியல்மி 1 வெளியானது இந்த ஸ்மார்ட்போன் பெற்று இருக்கும் வரவேற்புக்கு முக்கிய காரணம் எனலாம்.

விலை குறைவு என்பதால் மட்டும் பலரும் ஒரு பொருளை வாங்க மாட்டார்கள், அதுவும் நம்மவர்கள் கொடுக்கும் காசுக்கு ஏற்ற தரம் இல்லையெனில் அதனை வாங்கவும் நினைக்க மாட்டார்கள். இந்த அடிப்படையில் ரியல்மி 1 ஸ்மார்ட்போன் அழகிய வடிவமைப்பு, விலைக்கு ஏற்ற அம்சங்களை வழங்கி இருப்பதற்கு ஆகச்சிறந்த எடுத்துக் காட்டாக இந்த விற்பனை அமைந்திருக்கிறது.

சரி ஒப்போ ரியல்மி 1 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் அதன் விலை தான் என்ன?

Oppo Realme 1 Colors

ஒப்போ ரியல்மி 1 சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 2160×1080 பிக்சல் Full HD + IPS டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர்
– மாலி-G72 MP3 GPU
– 3 ஜிபி / 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– கலர் ஓஎஸ் 5.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3410 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ஒப்போ ரியல்மி 1 ஸ்மார்ட்போன் தற்சமயம் ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது என்றாலும், விரைவில் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆன்ட்ராய்டு பி அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 1 ஸ்மார்ட்போன் மூன்லைட் சில்வர், சோலார் ரெட் மற்றும் டையமன்ட் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஒப்போ ரியல்மி 1 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.8,990-க்கு கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.10,990-க்கும், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.13,990-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.