பயனுள்ள ஜிமெயில் டிப்ஸ்

இணைய உலகில் மின்னஞ்சல் சேவைக்கென பலரும் நாடும் ஒற்றை சேவையாக கூகுளின் ஜிமெயில் இருக்கிறது. மின்னஞ்சல் என்ற இமெயில் (E-Mail) என்றாலே ஜிமெயில் தான் என பலரும் நினைத்திருக்கின்றனர்.

அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் அதிகம் பயன்படுத்தப்படும் ஜிமெயில் தளம் சமீபத்தில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டது அனைவரும் அறிந்த ஒன்றே. ஜிமெயில் புதிய தோற்றம் பெற்றதோடு, அதன் அம்சங்களும் புதிதாய் சேர்க்கப்பட்டன.

ஜிமெயிலில் சேவையில் புதிதாய் சேர்க்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் சார்ந்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

இமெயில் த்ரெட் மியூட்:

க்ரூப் மெசேஜ்களை மியூட் செய்யும் வசதி ஐபோன் எக்ஸ் மாடலின் தனிப்பெரும் சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது. தற்சமயம் இதேபோன்ற வசதியை கூகுள் தனது மின்னஞ்சல் சேவையில் இணைத்திருக்கிறது. அதன்படி இமெயில் த்ரெட்களில் வரும் அதிகப்படியான மின்னஞ்சல்களை மியூட் செய்ய எளிய வழிமுறையை ஜிமெயில் வழங்குகிறது.

நீங்கள் ஏதேனும் க்ரூப் மின்னஞ்சல்களை உருவாக்கி, பின் குறிப்பிட்ட க்ரூப் சார்ந்த மின்னஞ்சல்களை பார்க்க வேண்டாம் எனில் நீங்கள் வெளியேற முடியும். குறிப்பிட்ட த்ரெட்-ஐ ஓபன் செய்து, மேல் பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து மியூட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் மின்னஞ்சல் உரையாடல்கள் மியூட் செய்யப்பட்டு ஆர்ச்சிவ் செய்யப்படும்.

சிறிது காலம் கழித்து நீங்கள் மியூட் செய்த க்ரூப் உரையாடல்களை அறிந்து கொள்ள விரும்பினால், ஜிமெயிலின் ஆல் மெயில் (All Mail) ஆப்ஷனில் பார்க்க முடியும். பின் இந்த உரையாடல்களை அன்மியூட் செய்ய முடியும். அன்மியூட் செய்ய உரையாடல்களை ஓபன் செய்து மூவ் டூ இன்பாக்ஸ் (Move To Inbox) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

சென்ட் ஆர்ச்சிவ்:

ஜிமெயிலில் நீங்கள் அனுப்பும் ரிப்ளை மற்றும் மின்னஞ்சல் ஃபார்வேர்டுகளுக்கு செக்கன்ட் சென்ட் (Second Send) ஆப்ஷனை செட்டப் செய்ய முடியும். இந்த ஆப்ஷன் உங்களது இன்பாக்ஸ்-ஐ ஒழுங்குப்படுத்தும். அடுத்த முறை குறிப்பிட்ட மின்னஞ்சல் தொடர்பான மெயில் வரும் போது, இந்த உரையாடல் பாப்-அப் ஆகும்.

இந்த ஆப்ஷனை செட்டப் செய்ய கியர் ஐகானை க்ளிக் செய்து செட்டிங்ஸ் — ஜெனரல் — சென்ட்& ஆர்ச்சிவ் ஆப்ஷனை செலக்ட் செய்து ஷோ சென்ட்&ஆர்ச்சிவ்-ஐ தேர்வு செய்து (Settings > General > Send & Archive, select Show “Send & Archive”), கீழ்பக்கம் ஸ்கிரால் செய்து சேவ் சேன்ஜஸ் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்ததும் வழக்கமான சென்ட் பட்டன் அருகிலேயே சென்ட்&ஆர்ச்சிவ் பட்டனும் காணப்படும்.

அன்டூ ஆப்ஷன்:

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல்களை திரும்ப பெறும் வசதியை அன்டூ(Undo) என்ற பெயரில் ஜிமெயில் வழங்குகிறது. பல்வேறு காரணங்களுக்காக நீங்கள் டைப் செய்த மின்னஞ்சல்கள் அல்லது, தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சல்களை உடனடியாக திரும்ப பெற முடியும்.

ஜிமெயில் செட்டிங்ஸ் — ஜெனரல் — அன்டூ ஆப்ஷன்களுக்கு சென்று மின்னஞ்சல்களை திரும்ப பெற அதிகபட்சம் 30 நொடிகளை தேர்வு செய்ய வேண்டும். (இங்கு குறைந்தபட்சம் 5, 10 மற்றும் 20 நொடிகளில் திரும்ப பெறும் வசதியும் வழங்கப்படுகிறது.) இனி கீழ்பக்கம் ஸ்கிரால் செய்து நீங்கள் மேற்கொண்ட மாற்றங்களை சேவ் செய்ய வேண்டும்.

இதுதவிர ஒவ்வொரு மின்னஞ்சலை நீங்கள் அனுப்பியதும், உங்களது மின்னஞ்சல் அனுப்பப்பட்டு விட்டது, திரும்ப பெற க்ளிக் செய்யவும் என்ற தகவல் இடம்பெறும். (Your message has been sent. Click Undo to bring it back) இதை பயன்படுத்தியும் மின்னஞ்சல்களை திரும்ப பெறலாம்.

மேம்படுத்தப்பட்ட தேடும் வசதி:

ஜிமெயில் தளத்தை கூகுள் வழங்குவதால், இதன் தேடுதல் அம்சங்கள் எவ்வாறு இருக்கும் என அனைவரும் அறிந்ததே. நம்மில் பலரும் மின்னஞ்சல்களின் மேல் காணப்படும் சர்ச் பாக்ஸ் கொண்டு பழைய மின்னஞ்சல்களை அதன் முக்கிய வார்த்தைகளை கொண்டு தேட பயன்படுத்தி இருப்போம். ஆனால் இந்த அம்சம் நம் கற்பையை கடந்து பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

மின்னஞ்சல் திரையில் காணப்படும் சர்ச் பாக்ஸ் அருகில் உள்ள சிறிய அம்பு குறியை க்ளிக் செய்தால் ஜிமெயிலின் மேம்படுத்தப்பட்ட தேடும் அம்சம் திறக்கும், இங்கு மின்னஞ்சல்களை தேதி, அட்டாச்மென்ட் அளவு போன்ற தகவல்களை பதிவிட்டு தேட முடியும்.

பிரிவியூ பேன்:

பெரிய டிஸ்ப்ளே பயன்படுத்துவோர் அதனை சிறப்பான முறையில் உபயோகிக்க ஜிமெயிலின் பிரீவியூ பேன் வழி செய்கிறது. இந்த அம்சம் செயல்படுத்தியதும் பார்க்க அவுட்லுக் போன்றே காட்சியளிக்கும், இங்கு இன்பாக்ஸ்-இல் இருந்தபடியே மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்ப முடியும்.

இந்த ஆப்ஷனை செயல்படுத்த செட்டிங்ஸ் — அட்வான்ஸ்டு — பிரீவியூ பேன் ஆப்ஷனை எனேபிள் செய்து, மாற்றங்களை சேமிக்க வேண்டும். இனி இன்பாக்ஸ்-இன் மேல் பக்கம் புதிய பட்டனை பார்க்க முடியும், இதில் பிரீவியூ பேனை ஆன் மற்றும் ஆஃப் செய்யும் வசதிகளை வழங்கப்படுகிறது.

டேப்களை தேர்வு செய்யலாம்:

இன்பாக்ஸ்-க்கு வரும் மின்னஞ்சல்களை ஒழுங்குபடுத்த கூகுள் கவர்ச்சிகர அம்சத்தை வழங்குகிறது. இதில் உங்களுக்கு வரும் முக்கிய மின்னஞ்சல்களை மட்டும் இன்பாக்ஸ்-க்கு அனுப்பி விட்டு, மற்ற விளம்பர மின்னஞ்சல்களை அதற்குரிய பக்கங்களுக்கு அனுப்பி விடுகிறது.

இந்த ஆப்ஷனை செயல்படுத்த செட்டிங்ஸ் — இன்பாக்ஸ் — கேட்டகரீஸ் ஆப்ஷன்களில் உங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து கொள்ளலாம்.

கூகுள் டிரைவ் மூலம் அட்டாச்மென்ட்:

ஜிமெயிலின் கம்போஸ் விண்டோ ஆப்ஷனின் கீழ்பக்கம் சிறிய டிரைவ் ஐகான் காணப்படும். இந்த ஐகான் பயன்படுத்தி டிரைவ்களில் சேமிக்கப்பட்டு இருக்கும் அல்லது லின்க்-களை மின்னஞ்சல்களில் அட்டாச் செய்ய முடியும்.

கூகுள் டிரைவ் ஃபார்மேட்களில் டாக்ஸ், ஷீட்ஸ், ஸ்லைட் உள்ளிட்டவையும், மற்ற ஃபைல் டைப்களை அட்டாச்மென்ட் போன்றோ அல்லது டிரைவ் லின்க் மூலமாகவோ அனுப்ப முடியும். டிரைவ் லின்க் கொண்டு ஜிமெயிலில் 25 எம்பி-க்கும் அதிக ஃபைல்களை அனுப்ப முடியும்.